உச்சி பிள்ளையார் கோவில் திருச்சி









இந்த மண்டபம் வேதபாராயணம் பயில்விக்குமிடமாக செயல்படுகிறது

தாயுமானசுவாமி கோவில்  காவிரியின, தென்கரையில திருச்சிராப்பள்ளி நகரின் மத்தியில் ஒப்பற்ற சுகப்பிரசவ பிராத்தனைத் தலைமாக விளங்குகிறது. இங்கு இறைவன் மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தளி உள்ளார்.
மலைமேல் மூன்றுதள  அமைப்பைக் கொண்ட இத்திருக்கோயில் உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாகக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதோடு சோழர் பல்லவர் பாண்டியர் பிற்காலச்சோழர் நாயக்கர் மராட்டியர் காலக்கட்டிடக் கலைப் பாணிகளைக் கொண்டு விளங்குகிறது.
கி.பி.7ஆம் ஆண்டு நூற்றாண்டில் மகேந்திரவர்மனால் அமைக்ககப்பட்ட பழைய குடைவரைக் கோயில்கள் இங்கு உள்ளன. சைவ சமய குரவர்களில் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது. ஐயடிகள் காடவர்கோன் அருணகிரிநாதர் தாயுமான அடிகள் ஆகியோராலும் பாடல் பெற்ற சிறப்பைக் கொண்டது. இத்திருத்தலத்தில் இறைவன் தாயாக வந்து அருள் புரிந்துள்ளார்.
இரத்தினாவதி என்ற செட்டி  பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். இத்தலத்தில் வசித்து வந்த இரத்தினாவதி என்ற பெண் ஒரு சிவபக்தை. அவளின் பிரசவ காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவள் தாயார் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த இரத்தினாவதியின் தாயாரால் இக்கரை வ்ரமுடியவில்லை.இங்கு இரத்தினாவதிக்கு பிரசவ நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. தனது பக்தையின் துயரம் கண்டு இறைவன் அவளது தாய் உருவில் வந்து இரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனாலேயே இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். குழந்தைப் பேறு, சுகப்பிரசவம் ஆக இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளும் தலமாக இந்த சிவஸ்தலம் விளங்குகிறது. கர்ப்பமுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதை அர்ச்சகர் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு பிறகு அங்கு வரும் பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக கொடுப்பார்.
மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும். இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். மேலும் சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான கங்காள மூர்த்தம் இத்தலத்தில் உள்ளது. மலையில் பல்லவர் காலத்திய இரண்டு குகைகள் உள்ளன.

இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி   எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வானை தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.
அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.