சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதி

சூட்டுக்கோல் ராமலிங்கசுவாமிகளும் அவரது சீடர்களும்
மாயாண்டி சுவாமிகள்
மாயாண்டி சுவாமிகள் காசி யாத்திரை செல்லும் திருகோலம்

     சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்தர். இவர் கையில் வைத்திருக்கும் சூட்டுக்கோல் நல்லவர்களுக்கு நன்மை தருவதாகவும் தீயவர்களுக்குத் தண்டனை தருவதாகவும் இருந்தது. ராமலிங்க சுவாமிகளின் காலத்துக்குப் பிறகு இந்த சூட்டுக்கோல் அவரின் சீடரான செல்லப்ப சுவாமிகளிடமும் அதன் பின் அவருடைய சீடரான மாயாண்டி சுவாமிகளிடமும் வந்தது.   மாயாண்டி சுவாமிகளின் ஜீவசமாதியின் மீது லிங்கமும் விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது விநாயகரின் வலது கரத்தின் அருகில் ராமலிங்க சுவாமிகள் வைத்திருந்த ''சூட்டுகோல்''  வைத்து வணங்கி வரப்படுகிறது

மாயாண்டி சுவாமிகளின் சீடர்  சோமப்பா சுவாமிகளின் ஜீவசமாதி
சோமப்பா சுவாமிகளுக்கு பக்தர்கள் கடலைமிட்டாய் வைத்து வணங்குகிறார்கள்
சோமப்பா சுவாமிகளின் கோவில் தோற்றம்
மாயாண்டி சுவாமிகளின் பிறப்பு.                                                                                   கட்டிக்குளத்தில் குப்பமுத்து வேளாளர்- கூத்தாயி அம்மாள் தம்பதியர் வசித்து வந்தனர். மண்பாண்டம் செய்வது இவர்கள் தொழிலமேலும்  உள்ளூரில் இருந்த ஐயனார் கோயில் பூசாரியாகவும் இருந்தார் குப்பமுத்து. சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் பக்தர்களாக இருந்தனர் இந்தத் தம்பதியர். அவ்வப்போது சுவாமிகளின் தரிசனம் பெற்று வந்தனர். ஒரு முறை ராமலிங்க சுவாமிகளிடம் திருவருட் பிரசாதம் பெற்ற பாக்கியத்தால், கூத்தாயி அம்மாளுக்கு காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தன்று ''1858''  ஜூலை மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு ''மாயாண்டி'' எனப் பெயரிட்டனர்.

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி.

                                            துரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவராகவும், காலங்களைக் கடந்து வாழ்ந்து வந்தவருமான காகபுசுண்டரின் (காகபுஜண்டர் என்றும் சொல்லப்படுவதுண்டு) பெயரிலேயே இங்கு ஒரு மலை அமைந்துள்ளது. ஆம்! அந்த மலையை காகபுசுண்டர் மலை என்றும் புசுண்டர் மலை என்றும் ஆன்மிக அன்பர்கள் தொன்றுதொட்டு அழைத்து வருகிறார்கள். மதுரையின் பெயரைத் தாங்கி, திருக்கூடல்மலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.  இந்த காகபுசுண்டர் மலையில் அடிவாரத்தில் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் சமாதி திருக்கோயிலும், மலைக்குச் செல்லும் வழியில் மாயாண்டி சுவாமிகளின் சீடரான சோமப்பா சுவாமிகளின் திருச்சமாதியும் அமைந்துள்ளது. தவிர வேலம்மாள், இருளப்பக் கோனார், மூக்கையா சுவாமிகள் இப்படி சுமார் பத்துக்கும் மேற்பட்ட சமாதிகள் இந்த காகபுசுண்டர் மலைப் பகுதியில் அமைந்துள்ளன. இந்த மலையின் புராணப் பெருமைகளை உணர்ந்த கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், இதைத் தன் தவப் பணிக்குத் தேர்ந்தெடுத்து இங்கே அமர்ந்தார். ‘காகபுசுண்டர் மலை, பழநிமலையைப் போன்றது’ என்றே மாயாண்டி சுவாமிகள் அடிக்கடி குறிப்பிடுவாராம். ‘குன்றக்குடியில் வெள்ளி ரதம் ஓடுவது போல் காகபுசுண்டர் மலையிலும் வெள்ளி ரதம் ஓடப் போகுது’ என்று சுவாமிகள் தன் காலத்தில் பக்தர்களிடம் அடிக்கடி கூறி வந்தாராம். சுவாமிகளின் திருவாக்கு மெய்யாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. காகபுசுண்டர்மலையில் - என்னென்ன திருப்பணிகள் நடக்க வேண்டும் என்று மாயாண்டி சுவாமிகள் திட்டமிட்டாரோ, அவை அனைத்தும் இப்போது மெள்ள மெள்ளப் பூர்த்தி ஆகி வருகின்றன. மாயாண்டி சுவாமிகள் ஜீவ சமாதி திருக்கோயிலையும், காகபுசுண்டர் மலையையும் தற்போது நிர்வகித்து வருகிறது ‘சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம்’.இவர். மலைக்கு மேல் ஸ்ரீதண்டாயுதபாணி ஸ்வாமி ஆலயம்  திருப்பணி நடந்து வருகிறது. மலை மேல் நடந்து செல்வதற்குப் படிகள் அமைத்திருக்கிறார்கள். விரைவில் கும்பாபிஷேகம் காண இருக்கிறது இந்த தண்டபாணி திருக்கோயில். மலை ஏறும்போது ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய ஸ்ரீநிவாசப் பெருமாள், ஆஞ்சநேயர் ஆகிய திருச்சந்நிதிகளைத் தரிசிக்கலாம். மலை உச்சியில் தனிச் சந்நிதியில் கோலாகலமாக வீற்றிருக்கிறார் ஸ்ரீதண்டபாணி. தவிர ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமீனாட்சி- சுந்தரேஸ்வரர், பள்ளிகொண்ட பெருமாள் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு.  எங்கே இருக்கிறது காகபுசுண்டர் மலை? சோமசுந்தரப் பெருமானும் அன்னை மீனாட்சியும் அருளும் மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தின் அருகில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. திருப்பரங்குன்றத்துக்குள் வந்து விட்டால், மலை மேல் இருக்கும் ஸ்ரீதண்டபாணி பெருமான் திருக்கோயிலை எங்கிருந்து வேண்டுமானாலும், காண முடியும். தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் இருந்து சுமார் பத்து நிமிட நடை தூரம். காகபுசுண்டர் மலை உச்சியில் ஸ்ரீதண்டபாணியைத் தரிசிக்கச் சென்றால், அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்தில் பூஜைக்கான மணி ஓசை ஒலிப்பதைத் துல்லியமாகக் கேட்க முடிகிறது. ஆனந்தமான சூழல். ரம்மியமான காட்சிகள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் அனைத்துக் கோபுரங்களையும், காகபுசுண்டர் மலையின் உச்சியில் இருந்து தரிசிக்க முடியும். மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கிறது திருப்பாச்சேத்தி. இங்கிருந்து தென்புறம் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகிய கிராமம் கட்டிக்குளம். பல ஞானியர் இங்கே சமாதி கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் - அதாவது போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் நடையாத்திரையாக ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களும் ஆன்மிக அன்பர்களும் தங்கிச் செல்வதற்கு திருமடங்கள் கட்டிக்குளத்தில் இருந்தன. உணவருந்தவும், ஓய்வெடுக்கவும் இந்தத் திருமடங்களை சாதுக்களும் யாத்ரீகர்களும் பயன்படுத்தி வந்தனர். கட்டிக்குளத்தில் அப்போது இருந்து வந்தவர் சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகள் எனும் சித்தர். மாயாண்டியின் பெற்றோர் தான் பூஜை செய்யும் உள்ளூர் ஐயனார் கோயிலுக்கு சிறுவனான மாயாண்டியையும் கூட்டிச் செல்வது குப்பமுத்துவின் வழக்கம். அப்படி ஒரு நாள் கூட்டிச் சென்றபோது மகனை வெளிக் கூடத்தில் அமர்த்தி வைத்து விட்டு, ஐயனார் பூஜைக்காகக் கருவறைக்குள் சென்றார் குப்பமுத்து. ஐயனாரின் திருமந்திரங்களைச் சொல்லி அவருக்கு அபிஷேக ஆராதனைகளை முடித்து விட்டு வியர்வை சொட்ட வெளியே வந்த குப்பமுத்து அதிர்ந்தார். அவர் கண்ட காட்சி பதற வைத்தது. குத்துக்காலிட்டுத் தியானத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மாயாண்டியின் தலைக்கு மேலே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடாமல் அசையாமல் இருந்தது. அதன் உடற் பகுதியும் வால் பகுதியும் சிறுவனின் உடலைச் சுற்றி இருந்தன. கடும் விஷம் உள்ள நாகம் மகனைக் கொத்திவிடப் போகிறதோ என்கிற பீதியில், “ஐயனாரப்பா... எம் மகனைக் காப்பாத்து” என்று கருவறையை நோக்கி ஓங்கிக் குரல் கொடுத்தார் குப்பமுத்து. பிஞ்சு மகனைப் பார்க்க வாஞ்சையுடனும் பயத்துடனும் திரும்பினார். என்னே அதிசயம்! நாகத்தைக் காணோம். தியானத்தில் இருந்து அப்போதுதான் மீண்டிருந்தான் மாயாண்டி. ‘மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது’ என்பதை அப்போது உணர்ந்து கொண்ட குப்பமுத்து, அவனை அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். இதே போன்ற சம்பவங்கள் பின்வந்த நாட்களிலும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் விஷயம் ஊருக்குள் பரவி, மாயாண்டியை ஒரு தெய்வ சக்தியாகவே அனைவரும் பார்க்க ஆரம்பித்தனர். பள்ளிப் படிப்பு ஒரு பக்கம்; ஆன்மிகத் தேடல் மறுபக்கம் என இருந்தார் மாயாண்டி. தன் வீட்டில் இருந்த பரம்பரைச் சொத்தான வைத்தியச் சுவடிகளையும், சித்தர் நூல் தொகுதிகளையும் தூசி தட்டி எடுத்துப் படித்தார். வியந்தார். அவ்வப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அதிகாலை பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டார் மாயாண்டி. இந்தக் காலத்தில் பெற்றோரின் வற்புறுத்தலால், புளியங்குடியைச் சேர்ந்த மீனாட்சி எனும் உறவுக்காரப் பெண்மணி, இவருக்கு மனைவியாக வாய்த்தாள். இல்லற வாழ்க்கையில் ஒரு மகனும் மகளும் உண்டு. ஒரு முறை பழநி யாத்திரைக்குச் செல்லக் கையில் பணம் இல்லாததால், மனைவி அணிந்திருந்த தங்க ஆபரணங்களை விற்று, யாத்திரையை மேற்கொண்டார். மாயாண்டியின் ஆன்மிகத் தேடுதல்களுக்கு எந்தத் தடையும் போட்டதில்லை அவரது மனைவி. தவிர, தன் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு ராமேஸ்வரம் செல்லும் சாதுக்களுக்கு அவ்வப்போது உணவளித்தும் மகிழ்ந்தார் மாயாண்டி. மாயாண்டி சுவாமிகளை இறைவன் எந்தப் பணிக்காக அனுப்பி இருக்கிறான் என்பது, அவனுக்கு மட்டும்தானே தெரியும்?! இல்லறத்திலேயே இவன் இருந்து விட்டால், எதிர்கால சமுதாயத்துக்கு என்ன பயனை செய்து விட முடியும்? மாயாண்டியை இறைவன் ஆட்கொண்டான். விளைவு - இல்லறம் இனிக்கவில்லை. தவத்திலும் யோகத்திலும் காலத்தை ஓட்டினார். சிட்டாய்ப் பறக்க விரும்பினார். தவத்திலும் சமாதி நிலையில் உடல் கூட வேண்டும் என்று விரும்பினார். அதற்கு முன் தீட்சை பெற வேண்டுமே! உபதேசம் செய்வதற்கு ஒரு குரு வேண்டுமே! இந்த வேளையில்தான் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை சென்று கொண்டிருந்த தஞ்சாக்கூர் செல்லப்ப சுவாமிகள் என்பவர், கட்டிக்குளம் வந்தார். அவரைச் சந்தித்துத் தன்னை சீடனாக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். செல்லப்ப சுவாமிகளும் மாயாண்டியை அரவணைத்து அவருக்கு உபதேசம் செய்து வைத்தார். துறவறத்துக்கான திறவுகோல் கிடைத்தாகி விட்டது. ஆனால், இல்லறத்தில் இருக்கும் மனைவி மற்றும் பெற்றோர் ஆகியோர் இந்த முடிவுக்கு உடன்படுவார்களா? இல்லையே! துறவறம் ஏற்று வீட்டை விட்டுப் புறப்படும் முடிவில் இருந்த மாயாண்டியை எவ்வளவோ தடுத்து நிறுத்தப் பார்த்தார்கள் பெற்றோரும், மனைவியும். ஆனால், மாயாண்டி சுவாமிகள் மசியவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து, கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார். சித்தமெல்லாம் சிவ மயம்! கன்யாகுமரி, கோட்டாறு, சுசீந்திரம், பொதியமலை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை உட்பட பல திருத்தலங்களைத் தரிசித்தார். ஆங்காங்கே சமாதி நிலையில் கூடினார். மதுரை மீனாட்சி அம்மனும், திருப்பரங்குன்ற முருகனும் அவரை ஈர்த்தனர். இறுதியாக, அவர் வந்து சேர்ந்தது திருக்கூடல்மலை எனப்படும் காகபுசுண்டர் மலைக்கு. இந்த மலையில் உலவும் சித்தர்களோடு கலந்து பேசினார். அரூப நிலையில் இருக்கும் சித்தர்களும் மாயாண்டி சுவாமிகளுக்கு ஆசி வழங்கினர். காகபுசுண்டர் மலையைத் தன் நிரந்தர வாசஸ்தலமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அவருக்குள் ஒரு அருள் வாக்கு எழுந்தது. சௌமிய வருடம் பங்குனி மாதம் சஷ்டி தினத்தன்று இரவு ஒன்பது மணிக்கு விளாச்சேரி பெரியசாமி சிவாச்சார்யர், விராட்டிப்பத்து பொன்னையா சுவாமிகள் மற்றும் சில அடியார்களோடு திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்றார். தரிசனம் செய்தார். அன்றைய இரவுப் பொழுதை சரவணப் பொய்கையில் கழிக்க விரும்பினார். ஈசான்ய மூலையில் உள்ள படித்துறையில் தங்கி, விடிந்ததும் முருகப் பெருமானை தியானித்து குளத்தில் மூழ்கினார். மண் எடுத்தார். அதை ஒரு சிவலிங்கமாகப் பிடித்து, காகபுசுண்டர் மலையின் மேல் பக்கம் தான் தங்கும் குகையில் பிரதிஷ்டை செய்தார். காகபுசுண்டர் மலை அன்றைய தினத்தில் இருந்து மேலும் புனிதத்தைப் பெற்றது. மாயாண்டி சுவாமிகள் ஸித்து விளையாட்டுகள் துவங்கின. தரிசனம் செய்ய வாருங்கள்!தலம்: திருப்பரங்குன்றம் காகபுசுண்டர் மலை எனும் திருக்கூடல்மலை. சிறப்பு: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்றும் சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதி. எங்கே இருக்கிறது?: மதுரை மாநகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கிறது காகபுசுண்டர் மலை. எப்படிப் போவது?: மதுரையில் அமைந்திருக்கும் பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து திருப்பரங்குன்றத்துக்குப் பேருந்து வசதி அடிக்கடி உண்டு. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்தால், காகபுசுண்டர் மலை வந்து விடும்

கருத்துகள் இல்லை: