மேலும், மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கின போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெரித்து அழகர்மலை மீது விழுந்ததாம். அதுவே கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் ''சுதபஸ்'' என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ'' அதாவது மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ'' என சாபமிட்டார். சாபம் பெற்ற ''சுதபஸ்'' துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், ''வேதவதி'' என்கிற ''வைகை'' ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார் என்கிறார்கள்.
ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல அழகர் கோவிலில் இருந்து பழமுதிர் சோலை வரை பஸ் வசதி உள்ளது, அதன் பின்பு அங்கிருந்து சுமார் பத்து நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். வாகனத்தில் செல்வோர் கோவில் அடிவாரம் வரை வாகனத்தில் செல்லலாம்.



