ராக்காயி அம்மன், மண்டூக மகரிஷி





பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற   அழகர் கோவில்  பிரசாதமான ''சம்பா'' தோசை தயார் செய்யப்படுகிறது.

            மேலும், மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கின போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெரித்து அழகர்மலை மீது விழுந்ததாம்.  அதுவே கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமாகும்.  இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் ''சுதபஸ்'' என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ'' அதாவது மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ'' என சாபமிட்டார்.  சாபம் பெற்ற ''சுதபஸ்''  துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், ''வேதவதி'' என்கிற ''வைகை'' ஆற்றில் தவம் செய்.  அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்  என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார் என்கிறார்கள்.

          ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல அழகர் கோவிலில் இருந்து பழமுதிர் சோலை வரை பஸ் வசதி உள்ளது, அதன் பின்பு அங்கிருந்து சுமார் பத்து நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். வாகனத்தில் செல்வோர் கோவில் அடிவாரம் வரை வாகனத்தில் செல்லலாம்.

கருத்துகள் இல்லை: