வாகனம் ஓட்டும் போது



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலருக்கு  சாலைகளில் இடம் பெற்றுள்ள சிக்னல்கள் பற்றி அறிந்திருப்பதில்லை. அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்


1. பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றமாகும்.

2. சாதாரண நேரங்களில் வாகனத்தின் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. 

அபாயகரமாக அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோதான் எரியவிட வேண்டும்.

3. சிக்னல் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4. ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு போட்டிருந்தால், முன் செல்லும் ஒரு வாகனத்தை  இந்த இடத்தில் நாம் முந்திச் செல்லலாம் என்று பொருள்.
அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று அர்த்தம் 

5. ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதி அதைகடந்து செல்லக்கூடாது.

6. ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். 

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

 7. கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் வைப்பது  முற்றிலும் தவறு.மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு  எச்சரிக்கை  சின்னமாகும்,
 ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின்  பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

8. நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீட்ட்ர் தூரத்திற்க்கு முன்பே நாம் "டிம்' செய்ய வேண்டும்.(எதிரே வருபவர் செய்யாவிட்டாலும்)

9.  வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு  "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இது மிகவும் தவறு, இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.

10. கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு ஆபத்தை விளைவிக்க கூடும்.

11. நான்கு வழிச் சாலையின் நடுவில் அரளி செடிகளையே ஏன் வைத்துள்ளனர் தெரியுமா?

 எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கவும்,  வறட்சியை தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது அதனால் சாலைகள் அதிகம் பாதிபடையாது பாதுகாக்கவும், இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'  செய்து சுற்றுபுற சூழலை பாதுகாக்கிறது. இவற்றை  விலங்குகளும் உண்பது இல்லை. இந்த செடிகளை  அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.

12. நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. 

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

சமணர் பள்ளி


அரசு அறிவிப்பு மட்டும் வைத்து என்ன பயண் பாதிமலையை காணவில்லை
 கீழகுயில்குடி கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மண் சாலை வழியே சிறிது தூரம் சென்றால் இந்த இடம் உள்ளது. வழியில் பெரிய பெரிய மரங்கள் உள்ளன ( இன்னும் எத்தனை காலத்திற்க்கோ )


சமணர்களின் குகை சிற்பங்கள் தீர்த்தங்கர்களின் சிற்பங்களில் பெண் சிற்பமும் உள்ளது. தீர்த்தங்கர்களில் பெண் தீர்தங்கர்கள் இல்லை, எனவே இது இடைகாலத்தில் இடை சொருகலாகவும் இருக்கலாம்.




இதை சமணர்களின் பள்ளி என்கிறார்கள், பள்ளியாக செயல்பட்டதற்க்கான எந்த அடையாளமும் இல்லை, 

இந்த சிற்பம் மிகவும் அழகாக மனதை கவரும் வகையில் உள்ளது.

சமணர் மலை


கீழக்குயில்குடி ஐய்யனார், கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மலையான சமண மலைக்கு இலகுவாக ஏறி செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்
  மலை மேல் இயற்கையாக அமைந்த ஒரு ஊற்று பகுதியை பேச்சிப்பள்ளம் என்று அழைக்கிறார்கள். பேச்சிப்பள்ளத்தில்  தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர்( தலைக்கு மேல் மூன்று குடை போன்ற அமைப்பு உள்ளதால்) சிற்பங்கள் உள்ளன. கீழே இந்த சிற்பங்களை நன்கு காண்பதற்காக தனிதனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து சற்று மேலே சென்றால் விளக்கு தூண் ஒன்று உள்ளது. அதன் அருகில் கண்ணட எழுத்துக்களாலான கல்வெட்டும் உள்ளது.










கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் எந்தமொழி என்று தெரியவில்லை விசாரித்தால் வட்டெழுத்து என்கிறார்கள் (வட்டவட்டமாக எழுதிருப்பதால் இருக்குமோ?)









தீர்த்தங்கர் சிற்பங்களின் ம்ற்றுமொரு கோணம்

கீழகுயில்குடி சமணமலை கருப்பசாமியும் ஐயனாரும்






பூரணகலை ஐயனார் புஷ்பகலை
கருப்பசாமி







 மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறியமலை சமணர் மலை ஆகும். அதன் அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ''பாவாடை விழா'' நடைபெறுகிறது. அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் சோறு சமைத்து அதை நைவேத்தியம் செய்து, பின்பு  ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்கள், முத்தாலம்மனின் சிலையை களிமண்ணால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். திருவிழாவில் ஆறு களிமண் குதிரைகள் செய்து வைக்கின்றார்கள். அன்று ஆடுகள் பலியிடப்படுகின்றன ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த நல்ல காரியத்தையும் செய்வது இல்லை. இக்கோவில் சிற்பங்கள் சைவ, வைனவ திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கருப்பசாமி போன்ற தெய்வங்களை தேவர், நாடார் சமுதாயத்தவர்களே அதிக அளவில் வணங்கி வருகிறார்கள் எனவே சமணர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்தவித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் ஐயனார் மட்டும் இருந்த கோவிலில் காவல் தெய்வமாக கருப்பண்னசாமியும், மற்றவேறு பல தெய்வங்களும் பின்பு அமைக்கப்பட்டுள்ளது. 

ராக்காயி அம்மன், மண்டூக மகரிஷி





பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற   அழகர் கோவில்  பிரசாதமான ''சம்பா'' தோசை தயார் செய்யப்படுகிறது.

            மேலும், மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கின போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெரித்து அழகர்மலை மீது விழுந்ததாம்.  அதுவே கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமாகும்.  இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் ''சுதபஸ்'' என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ'' அதாவது மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ'' என சாபமிட்டார்.  சாபம் பெற்ற ''சுதபஸ்''  துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், ''வேதவதி'' என்கிற ''வைகை'' ஆற்றில் தவம் செய்.  அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்  என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார் என்கிறார்கள்.

          ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல அழகர் கோவிலில் இருந்து பழமுதிர் சோலை வரை பஸ் வசதி உள்ளது, அதன் பின்பு அங்கிருந்து சுமார் பத்து நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். வாகனத்தில் செல்வோர் கோவில் அடிவாரம் வரை வாகனத்தில் செல்லலாம்.

சூரியனார்


பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் '' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'' எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும். ''பாவிஷய'' என்னும் புராணம் ஸ்ரீகிருஷ்ணரின் மகனான ( கிருஷ்ணருக்கு ஏது மகன்? தெரிந்தவர்கள் விளக்கவும்) ''சாம்பா'' தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது சூரியனை வழிபட்டு நலமடைந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.  வளம்பெற தினசரி காயத்ரி மந்திரம் ஒன்பதின் மடங்குகளில் சொல்லிவரலாம்.

காயத்ரி மந்திரம்:


''ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்''

சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியனாருக்கு ரதம் செலுத்தும் சாரதியாக உள்ளவரின் பெயர் ''அருணன்'' என்பதாகும். இந்த சூரியனார் எழுந்தருளியிருப்பது தேனி விருதுநகர் பேட்டை வரசித்திவினாயகர் கோவிலில், வணங்கி வளம் பெறுவோம்.


பெரியாழ்வார் ஜீவசமாதி




 வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது  இவரது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்று மலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக தொடுத்து சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின்  வளர்ப்பு தந்தையாவார். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார். இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அனைவரும் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனதாம்.இவரின் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் பூங்காவின் அருகில், பழமுதிர்சோலைக்கு பஸ் புறப்படும் ஆர்ச் அருகில் அமைந்துள்ளது.

அழகர்மலை கள்ளழகர் கோவில்


அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது. இந்த அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். சைவ, வைணவ   மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த கோவில் எக்காலத்தில் தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்திதலம்,தீர்த்தம்ஆகியவை பற்றிய வராக புராணம்பிரம்மாண்டமான புராணம்வாமன புராணம்முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் அழகர்  என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.



இங்கு பதினெட்டாம்படி கருப்பசாமி  மிகவும் பிரபலமானவர்




கட்டிமுடிக்கப்படாத ராஜகோபுரம்  ''மொட்டை கோபுரம்''
மிகவும் பிரபலமான மதுரை  அழகர் கோவில் தோசை பிரசாதம் இது  சாப்பிடுவதற்கு தோசை  மாதிரியாகவும் இல்லை, பனியாரத்தை தோசை அளவிற்கு செய்தது போல், மந்தமாக  வெளியில்  சற்று பூரி போல் மொறுமொறுப்பாகவும் உள்ளே  சற்று மிருதுவாகவும், தோசை சட்டியில் சற்று அதிகமாக  எண்ணெய் விட்டு சுட்டது போல்  இருக்கிறது, மிளகு ருசி சற்று தூக்கலாக சாப்பிடுவதற்கு நன்றாக உள்ளது. கோவிலுக்கு சென்று வரும் போது அவசியம் தோசை பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்