ரயில் பயணங்கள்

 
  நீங்க என்ன வேணுமானாலும் நினைச்சுக்கோங்க... பஸ் பயணிகளை விட ரயில் பயணிகளிடம்தான் மனித நேயம் அதிகம்...

     பஸ் பயணத்தின் போது பக்கதிலிருக்கும் பயணியோடு சகித்து கொண்டு பயணிக்காத பயணிகூட ரயில் பயணத்தில் சகித்து கொள்வதோடு அல்லாமல் உதவி கொண்டும் உறவாடி கொண்டும் பயணிக்கிறார் அது ஏனென்று எனக்கு புரியவில்லை...

     பல வருடங்களாக எனக்கு எனது பயண அனுபவங்களை எழுத தோணும் ஆனால் நான் பயணங்கள் பற்றி எழுதாமல்.  நான் அங்கு மொபைல் போனில் எடுத்த படங்கள் பற்றி மட்டுமே சிறு குறிப்புகள் எழுதினேன்... ஆனால் இந்த முறை நான் சென்ற ஒரு ரயில் பயணத்தில் கண்ட நிகழ்ச்சியை சொல்ல வேண்டுமென மனது சொல்லி கொண்டே இருக்கிறது, ஆகவே இந்த பதிவு... நண்பர்களே....

        அன்று மதியம் ஒரு மணிக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய ரயில், ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், நானும் எனது மனைவியும் ரயில் நிலையம் வந்தடைந்த போது 12: 55 எனவே அவசர அவசரமாக ரயில் நிலையத்துள் நுழைந்து நடை மேடை எதுவென தேடி D1 பெட்டி வந்து நிற்குமிடம் தேடி நாங்கள்  நிற்கவும் ரயில் வந்து சேரவும் சரியாக இருந்தது அப்பாடா சற்று நிம்மதியாக இருந்தது சரியான நேரத்திற்க்கு வந்து விட்டோம் என்று,  படுக்கை வசதி இல்லாமல் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டி அது, நாங்கள் ரயிலில் ஏறி கையிலிருந்த பைகளை கேரியரில் பார்வையில் படும் படியாக வைத்துவிட்டு எங்களது இருக்கையில் அமரவும் வண்டி நகரவும் சரியாக இருந்தது.

            இப்போது பக்கத்தில் எதிரில் பக்கவாட்டில் யார்யாரெல்லாம் பணிக்கிறார்கள் என நோட்டம்விட ஆரம்பித்தேன். நான் மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலும் எனது வலதுபுறம் ஜன்னல் ஓரத்தில் சிவப்பு டீசர்ட்டில் ஒரு சுமார் ஐம்பது வயதில் சற்று இளமையாக ( டை அடிச்சு) ஒருவரும் எனக்கு இடதுபுறம் எனது மனைவியும் அதற்கு இடது புறம் நடை பாதையும் இடது பக்கவாட்டில் சிவப்பு டீசர்ட் டின் குடும்பமும் அவர்களுக்கு எதிர்புறம் தோழிகளாக மூன்று பெண்களும் எங்களுக்கு எதிர்புறம் இருக்கையில் ஒரு வயதான தம்பதியரும் ஒரு சிறு குழந்தையுமாக எங்களது பயணம் தொடங்கியது,,,

         பக்கவாட்டு இருக்கைக்கு எதிர்புற இருக்கையில் அமர்ந்து வந்த தோழிகள் மூன்று பேரும் கலகலப்பாக பேசிக் கொண்டும் தாங்கள் கொண்டு வந்த பலகாரம் தின்பண்டங்களையும் எடுத்து ஒருவருக்கு ஒருவர் கொடுத்து சாப்பிட்டு  கொண்டு பேசிக்கொண்டு வந்தார்கள்...  அவர்கள் கலகலப்பாக வந்ததாலோ என்னவோ அவர்களை நான் அவ்வப்போது கவனித்து கொண்டே வந்தேன். அதில் ஒருவர் மட்டும் சற்று நிறம் மங்கலான கலரில் சேலை உடுத்தி பார்க்க கிருத்துவர் போல் பொட்டு வைக்காமல் இருந்தார். மற்றவர்கள் இருவரும் இந்து பெண்கள் என பார்த்தவுடனே பளிச்சென தெரியும்படியாக இருந்தார்கள்.

   இப்படியே பயணித்து கொண்டிருக்க அந்த தோழிகள் மூவரும் ஏதோ சீரியசாக பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் சத்தம் கூட குறைந்து சற்று கசு புசுன்னு பேசுவது வெளியில் கேட்காமல் பேசிகொண்டே வந்தார்கள்...  அப்போது அந்த கிருத்துவ பெண் மட்டும் ஏதோ மறுக்கிறார் என்பது மட்டும் புரிந்தது, இப்படியே சிறிது நேரம் போய் கொண்டே இருக்க...  மற்ற இரு பெண்களில் ஒருவர் அவருடைய கைபையை திறந்து உள்ளே இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தார்... அப்போது அந்த கிருத்துவ பெண் மறுத்தார்... நானும் எனது மனைவியும் சற்று சுவராசியமாக கவனிக்க ஆரம்பித்தோம், அப்போது அந்த இந்து பெண் அந்த கிருத்துவ பெண் தடுத்தும் அவர் நெற்றியில் அந்த ஸ்டிக்கர் பொட்டை ஒட்டினார்... ஒட்டிவிட்டு எங்களுகாகவாவது வைத்துகொள் இப்படி உன்னை பார்ப்பதற்க்கு எங்களுக்கு ரெம்ப கஷ்டமாக இருக்கிறது என அன்புக் கட்டளையிட்டார். மற்றொரு தோழி நாம் ஊரை விட்டு ரெம்ப தூரம் வந்துவிட்டோம் நீ ஒன்னும் சங்கடப்பட வேண்டாம் என்றார். எனக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அவர் கிருத்துவ பெண் இல்லை கணவரை இழந்தவர் என்று. ஆனால் அவர் மனதில் சற்று நெருடலுடனே அதை ஏற்று கொண்டிருப்பது தெரிந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் மூவரும் சற்று கலகலப்பு இன்றி பேசிக்கொண்டே வந்தார்கள். பிறகு பழையபடி கலகலப்பானர்கள் தோழிகள்...  அப்போது பொட்டு வைத்துவிட்ட தோழி சொன்னார். அந்த கணவனை இழந்த பெண்னை பார்த்து, உன்னை பார்ப்பதற்க்கு இப்ப எப்படியிருக்கு தெரியுமா? ரெம்ப அழகா பழைய மாதிரி எனக்கு பிடிச்சமாதிரி சந்தோசமா இருக்கு என்று முகம் மலர்ந்து கொண்டே ஒரு கையால் அவரை கட்டியணைத்து கொண்டு கண்கலங்க அருகே இருந்த மற்றொரு தோழியும் அவர்களிருவரையும் இரு கைகளால் தழுவி கொண்டே உணர்ச்சி பெறுக்கில் இப்போ எல்லோரும் பொட்டு வைத்து கொள்கிறார்கள் நீதான் யோசிக்கிற... நீயும் இனிமேல் பொட்டு வச்சுக்கோ என்று கலங்க ஆரம்பித்தார். அந்த கணவனை இழந்த பெண் மிகவும் நெகிழ்ந்து தோழியரை அனைத்து கொண்டு உணர்ச்சி மேலீட்டால் மிகவும் கலங்கித்தான் போனார்  எனக்கும் அவர்களின் செய்கை கண்டு சற்று கண் கலங்கித்தான் விட்டது. அற்புதமான நட்பு அருமையான் தோழிகள்...  உண்மையிலேயே அந்த பெண்ணுக்கு பொட்டு வைத்தவுடன் நன்றாகத்தான் இருந்தது..

     அதன் பின்பு அவர்கள் சாப்பிட தயாரானார்கள். சாப்பிட்டு கொண்டும் பேசிகொண்டும் வந்தார்கள். கணவனை இழந்த அந்த பெண் இப்போது சகஜமான நிலைக்கு வந்துவிட்டார். தனது கைபேசியை எடுத்து போன் செய்வது போல் யாரும் அறியாமல் தனது பொட்டு வைத்த முகத்தை கைபேசியில் பார்த்து கொண்டார். அவ்வப்போது அவருடைய கை அவரது நெற்றி பொட்டை தொட்டு பார்த்து கொண்டே வந்தது... அவருக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்தது என்பதை அவர் பேசும் முகபாவனையில் என்னால் உணர முடிந்தது...

    இப்போது  எங்களுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான தம்பதியர்களுக்கு சில இருக்கைகள் தள்ளி இருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து வந்து முதியவருக்கு சாப்பாட்டு பார்சலை கொடுத்தார். அந்த முதியவர் சாப்பாட்டை வாங்கும்போதுதான் கவனித்தேன் அந்த முதியவருக்கு இருகைகளும் சரியாக ”வெளங்கவில்லை”  கருநீலகலர் முழுக்கை சட்டை கைலி அணிந்து மிஸ்டர் பீம் போல் தோற்றமளித்தார்... அவருடைய கைகளில் பல ஆண்டுகளுக்கு முன் தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும் அதன் அடையாளங்கள் தெரிந்தன. அந்த ஒத்துழைக்காத கைகளால் தனது சாப்பாட்டு பார்சலை மடியில் வைத்து பிரித்து அதிலிருந்த லெமன் சாதமும் அதற்கு துனையாக இருந்த அவித்த முட்டையையும்  சாப்பிட  இடது கைவிரல் இடுக்கில் ஒரு சிறு கரண்டியை இடுக்கி கொண்டு கரண்டியை பயண்படுத்தி சாப்பிட தொடங்கினார். அப்போது தவறி சிறிது சாப்பாடு சிந்தி கீழே விழ அவருக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த சிவப்பு டீசர்ட் எழுந்து கொண்டு அய்யா மெதுவா அவசரமில்லாம் நல்லா சாப்பிடுங்கன்னு சொல்லிவிட்டு, அவருக்கு நல்ல இடவசதி செய்துவிட்டு எழுந்து நடைபாதையில் நின்று கொண்டார். அந்த முதியவர் சாப்பிடும் போது மடியில் சிந்தி சிதறி தன்னால் முடிந்த அளவுக்கு ரெம்ப பக்குவமாகவே சாப்பிட  தொடங்கினார். அவருடைய மனைவியும் அவருக்கு சாப்பிட உதவினார் வாயை துடைத்தார், மெதுவா சாப்பிடுங்கன்னு கனிந்தார், அப்போது அந்தம்மாவிற்க்கும் ஒரு சாப்பாட்டு பார்சல் வந்தது, அந்த முதியவர் நான் சாப்டுக்கிறேன் நீ சாப்பிடுன்னு தனது குளரும் வாயினால் அந்தம்மாவை சாப்பிட்ட சொல்லி சாப்பிட வைத்தார், அந்தம்மா அவருடைய சாப்பாட்டை சிறு குழந்தைகளுக்கு பிசைந்து ஊட்டுவது போல் பிசைந்து பிசைந்து தனக்கே ஊட்டி கொண்டும் வாயில் சில பற்கள் மட்டுமே இருந்ததால் சாப்பாட்டில் இருந்த உளுந்தம்பருப்பு போன்றவைகளை வாயினுள் விரலைவிட்டு தோண்டி எடுத்து இருக்கையின் மீதே வைத்து கொண்டும் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர்களுக்கு சாப்பாடு கொடுத்த அந்த நபர் அவர்களுடைய மகனாக இருக்க வேண்டும் அவர் இப்போது அவர்களின் அருகில் நின்று கொண்டு கையில் தண்ணீர் பாட்டிலில் மூடியை திறந்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அவர்களுக்கு வாயில் தண்ணீர் கொடுத்து கொண்டும், அவர்கள் சிந்திய சாப்பாட்டை துடைத்து கொண்டும் சாப்பிடவைத்தார். அப்போது சிரிப்பு நடிகர் நாகேசுக்கு சுடிதார் போட்டது போல் ஒரு பெண் வந்தார், அவரும் அவர்களை நன்றாக சாப்பிடும்படி கூறினார், சிறிது ஊறுகாயும் சாப்பிட கொடுத்தார் அந்த முதியவர்களின் மருமகள். அவர்கள் சாப்பிட்ட பின் அவரது மகன் அந்த பார்சல் பேப்பர்களை வாங்கி கொண்டு அவர்களையும் சுத்தம் செய்து அவர்கள் சாப்பிட்ட இடத்தையும்  சுத்தம் செய்தார். அவர் மகன் மருமகள் வீட்டில் எப்படி இருப்பார்களோ ஆனால் ரயில் பயணங்கள் தாய்தந்தையை பிள்ளைகள் பக்கத்திலிருந்து கவனித்து கொள்ளும்படி செய்திருக்கிறது...  பார்க்கவே சற்று மனசுக்கு இதமாகத்தான் இருந்தது... இப்போது சிவப்பு டீசர்ட் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தார்.
 
   அப்படியே பயணித்து கொண்டிருக்க அந்த நாகேசும், அந்த நாற்பதும் ஒரே இருக்கையில் நெருங்கி அமர்ந்து கொண்டு இருவரும் சீண்டி கொண்டும் அந்த பெண்ணின் தொடு திரை கைபேசியில் ( நாற்பதிடம் சாதாரண கைபேசி ) பார்த்து  கொண்டும் வந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் இறங்க வேண்டிய நிலையம் வரவே இறங்கி கொண்டார்கள்.

 இப்போது எங்களின் இருக்கைக்கு எதிர் இருக்கைக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரியின் கணவரும் அவர்களது உறவினர் ஒரு பெண்ணும் வந்தார்கள்.  சகோதரிகளில் ஒருவர் கீதாம்மா, அவரது கணவர் கீதாப்பா அவர்கள் அவர்களை அப்படித்தான் அழைத்து கொண்டார்கள்,
  எதிர் இருக்கையில் கீதாப்பா, கீதாம்மா, அவரது சகோதரி அமர்ந்து கொள்ள பக்கவாட்டு இருக்கையில் அந்த உறவுபெண்ணும் அமர்ந்து வந்தார்கள்.

 கீதாப்பா, பசிக்குது சாப்பிடல்லாம்ன்னு சொன்னார். கீதாம்மா நீங்க சாப்பிடுங்க நாங்கள் சிறிது நேரம் கழித்து சாப்பிடுகிறோம்ன்னு சொல்லி அவருக்கு கையில் ஒரு பேப்பர் தட்டை கொடுத்து விட்டு புளிசாதத்தை பறிமாற துவங்கினார், (அவர்களிருவரும் ஆசிரிய பணி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் அவர்களது பேச்சில் அப்படித்தான் தெரிந்தது) அப்போது கீதாப்பா சாப்பாட்டை  சிறிது தவறவிட்டார், சாப்பிட துவங்கினார் அப்போதும் மடியில் சிந்தி சிதறி கொண்டே சாப்பிட்டு வந்தார்... கீதாம்மா சிதறாம சாப்பிடுங்கன்னு சொல்லி செல்லமா கடிந்து கொண்டு சிந்தியவற்றை எடுத்து துடைத்து கொண்டும் வந்தார் பிறகு தயிர் சாதம் அதையும் சிதறியபடியே சாப்பிட்டு கொண்டு வந்தார் கீதாம்மா துடைத்து கொண்டே வந்தார்.
 நான் கூட நினைத்தேன் ஏன் நன்றாகத்தானே இருக்கிறார். சாப்பிட கூட தெரியாதவராக இருக்கிறாரேன்னு. கீதாப்பா சாப்பிட்டவுடன் கீதாம்மா சொன்னார் ஒன்னரை ஆள் உக்காருர இடத்திற்கு மூனு பேர்ன்னு சொல்லி மூனு டிக்கெட் வாங்கிவிட்டார்கள் (அவர்கள் சைஸ் அப்படி) நீங்கள் எதிரே வாசலுக்கு அருகில் போய் நின்று கொள்ளுங்கள் என்றார். அவரும் சரி என்று சொல்லி தலையாட்டி விட்டு கீதாம்மாவின் பார்வையில் படும்படியாக போய் நின்று கொண்டு வந்தார். சகோதரிகள் இருவரும் வசதியாக அமர்ந்து பயணித்து வந்தனர், அவ்வப்போது கீதாம்மா கீதாப்பாவை அழைப்பார் அவர் வந்தவுடன் அவரது மேல் சட்டை பையில் வைத்திருக்கும் தொடுதிரை போனை எடுத்து பேசுவார் பேசி முடித்துவிட்டு அவரது (கீதாப்பாவின்) சட்டை பையிலேயே வைத்துவிடுவார், பிறகு கீதாப்பா பழையபடி வாசலருகில் சென்று நின்று கொள்வார் இப்படியே பலமுறை, பிறகு சோமாஸ், வடை, டீ விற்று வருவதை கீதாம்மா வாங்குவார், கீதாப்பாவை அழைத்து பணம் கொடுக்க சொல்வார், அவர் பணத்தை கொடுத்துவிட்டு பழைய இடத்துக்கே சென்று நின்று கொள்வார்.. இப்படியே அவர்கள் பயணித்து கொண்டிருந்தார்கள்.

 நான் என் மனைவியிடம் பசிக்கிறது நாமும் சாப்பிடுவோமா என்றேன், சரி என்று சொல்லி இருக்கைக்கு கீழே குச்சிபையில், இரண்டு சிறிய  எவர்சிலவர் டப்பாவில் கொண்டு வந்திருந்த தக்காளி சாதத்தை எடுத்து  எனக்கு ஒன்று கொடுத்து விட்டு அவரும் ஒன்றை வைத்து கொண்டு சாப்பாட்டுக்கு துனையாக முன்பே வாங்கி வைத்திருந்த பருப்பு வடையையும் கொடுத்தார்,
 நாங்கள், இருவரும் சாப்பிட்டு கொண்டே சாப்பாடு நன்றாக இருப்பது பற்றி பேசிக்கொண்டே கொண்டே வந்தோம், நான் அப்போது சொன்னேன் எல்லோரும் எப்படி தனது புருசனை நன்றாக கவனித்து சாப்பிட செய்கிறார்கள் நீயும் இருக்கியே... என்னை கண்டு கொள்ளவே இல்லையென்று சொன்னேன். அவ்வளவுதாங்க என்மனைவி போட்டாளே ஒரு போடு, எல்லோரும் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்.  ஆனால் நான் மட்டும்தான் புருசனோடு வந்திருக்கிறேன்னு.....

அவ்வளவுதான் நான் அதற்குமேல் ஒன்றுமே பேசவில்லை....
மனசுக்குளே நம்ம பொண்டாட்டி சூப்பர்...  நம்மளை எப்படி மரியாதையா வச்சிருக்கான்னு நெனைச்சு... நெனைச்சு மகிழ்ந்தபடியே பயணித்தேன்....

கருத்துகள் இல்லை: