ஸ்ரீ சித்திர புத்திர நாயனார் திருக்கோயில்



ஸ்ரீ  சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. இக் கோவில் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி கிராமத்தின் அருகில் தீர்த்த தொட்டி கோவில் எதிர்புறம் அமைந்துள்ளது. இவர் சித்திர குப்தன் என்றும் அழைக்கப்படுகிறார், இவர் நீதிதேவனிடம் வரவு செலவு கணக்கு எழுதும் பணியை செய்துவருகிறார்.

சித்திர புத்திரன்

சிவன், ஜீவராசிகள் செய்யும் அனைத்துச் செயல்களையும் பராமரிப்பு செய்ய எண்ணினார். இந்தப் பணியை யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணியபடி சக்திதேவியைப் பார்க்கிறார். அதை புரிந்து கொண்டு  அவர் ஒரு சித்திரம் வரைகிறார். அந்த சித்திரத்திற்கு சிவனும் சக்தியும் சேர்ந்து உயிரளிக்கின்றனர். அதிலிருந்து தோன்றியவர்தான் சித்திர புத்திரர். அதன் பின்பு இவர் தேவலோகத்தின் தலைவன் இந்திரன், அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்டார். அதன் பிறகு சிவன் அனைத்து ஜீவராசிகளின் செயல்கள் குறித்து கணக்குகள் எழுதி அதைப் பராமரிக்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தார் என்கிறது இந்து சமய புராணங்கள். சித்திர புத்திரன் என்கிற பெயரை விட சித்திர குப்தன் என்கிற பெயரே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்திரம் என்றால் "ஆச்சரியமானது", "குப்தம்" என்றால் "ரகசியம்" என்று பொருள். இவர் எப்படிப்பட்ட ரகசியத்தையும் கண்டறிந்து கணக்கெழுதி விடும் திறனுடையவர். இதனால் இவருடைய கணக்குகள் எழுதும் முறை ஆச்சரியமானது பிறருக்குத் தெரியாதது எனும் பொருளில் இவரை "சித்திரகுப்தன்" என்றே அழைக்கின்றனர்.

நம்பிக்கைகள்

  • உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு  முதல் இறப்பு  வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்திர புத்திர நாயனார்தான் என்பது ஹிந்து  சமய நம்பிக்கையுடையவர்களின் நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்பது இந்து சமயத்தவர்களின் நம்பிக்கை.
  • நவக்கிரகங்களில் கேதுவுக்கு சித்திரகுப்தன்தான் அதிபதி என்றும் கேது தோசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோசம் நீங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

கருத்துகள் இல்லை: